சென்னை கிண்டி-கத்திப்பாராவில் நடக்கும் மெட்ரோ பணிகளை முதல்வர் பார்வையிட்டபோது ரீல்ஸ் எடுக்கப்பட்டதாகவும், தடை செய்யப்பட்ட இடத்தில் ட்ரோன் மூலம் ரீல்ஸ் எடுத்ததாக விஜய் மீது மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “சென்னை கிண்டி – கத்திப்பாராவில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளை, நேற்று முன்தினம் முதல்வர் விஜய் ஆய்வு செய்தபோது, 101 அடி உயரத்தில் நின்று, ‘ட்ரோன் கேமரா’ வாயிலாக, ‘ரீல்ஸ்’ எடுத்திருக்கிறார். விமான நிலையத்திற்கு மிக அருகே உள்ள அந்த பகுதி, தடை செய்யப்பட்ட இடமாக வரையறுக்கப்பட்டு உள்ளது.
இங்கு, எவ்வித ட்ரோன்களையும் பறக்க விட அனுமதி கிடையாது. நாட்டின் பாதுகாப்பு குறித்த புரிதல் இல்லாமல், முதல்வர் விஜய் விதிகளை மீறியிருப்பது கண்டனத்திற்கு உரியது.
இதில், மத்திய அரசும், விமான போக்குவரத்து இயக்குநரகமும் தலையிட்டு, உடனே வழக்கு பதிந்து விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ட்ரோன்களை எங்கு பறக்க வைக்க வேண்டும், என்பது குறித்து மத்திய அரசு தெளிவாக விதிகளை வகுத்திருக்கிறது. இந்த விஷயத்தில் வான்வெளியை 3 ஆக மத்திய அரசு பிரித்திருக்கிறது. பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு பகுதிகளில்.. சிவப்பில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்கள், ராணுவ தளங்கள், அரசின் முக்கிய இடங்கள் இந்த ரெட் ஜோனில் வருகிறது. அப்படியாக கிண்டி-கத்திரபாரா பகுதியும் ரெட் ஜோனில் வருகிறது.
இங்குதான் விஜய் ட்ரோன் வீடியோ எடுத்து ரீலஸ் போட்டிருப்பதாக அதிமுக குற்றம்சாட்டியிருக்கிறது. இப்படி தடையை மீறி ட்ரோன் வீடியோ எடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
