இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், சோனி நிறுவனம் தனது வருமான விவரங்களை சீலிட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சோனி மியூசிக் எண்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இனையதளங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு இசை நிறுவனங்கள் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாகவும், இது காப்புரிமை சட்டத்தை மீறுவதாகவும் இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக சோனி நிறுவனம் தனது பாடல்களை மாற்றியமைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சோனி நிறுவனம், எக்கோ நிறுவனத்திடமிருந்து பாடல்களின் உரிமையை பெற்றதாக கூறினாலும், அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தடை உத்தரவு வழங்கியிருந்ததாகவும், அந்த உத்தரவை மதிக்காமல் தன்னுடைய பாடல்களை வணிகரீதியாக பயன்படுத்தி வருவதாகவும் இளையராஜா தெரிவித்தார்.
அத்துடன், சோனி நிறுவனம் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தி ஈட்டிய வருமான விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சோனி நிறுவனம் தனது வரவு–செலவு மற்றும் வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்திருந்தார்.
இன்று விசாரணை நடைபெற்றபோது, சோனி நிறுவனம் தனது வருமான விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தது. மேலும் சமீபத்தில் வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில் தங்களுடைய இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இளையராஜா தரப்பு தெரிவித்தது.
இதற்கு நீதிபதி, “டியூட் திரைப்படம் தொடர்பாக தனியாக வழக்கு தொடரலாம்” என தெரிவித்தார். பின்னர் வழக்கின் தொடர்ந்த விசாரணையை நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
