‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி வேறுபாடுகள் குறித்த வலியமான செய்தியை சமூகத்தில் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அதன்பின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் இயக்கிய ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ளது. துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘கர்ணன்’, ‘வாழை’ படங்களைப் போலவே, கிராமத்து வாழ்க்கையின் உண்மைநிலை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்தப் படமும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டபோது, மாரி செல்வராஜ் சுவாரஸ்யமான பதிலை அளித்தார்.
அவர் கூறியதாவது:
“ரஜினிகாந்த் சாருக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனது ஒவ்வொரு படம் வெளிவரும் போதும் அவர் என்னை அழைத்து பாராட்டுவார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்கள் வெளியானபோது நேரில் அழைத்து வாழ்த்தினார். ‘வாழை’ படம் வந்தபோது, பெரிய கடிதம்கூட அனுப்பினார்.
நாங்கள் கதைகள் பற்றி பேசிவிட்டோம். என்னிடம் சில கதைகள் உள்ளன, அதில் சிலவற்றை அவரிடம் கூறியுள்ளேன். அவர் என்னை நம்பி, எனது நேர்மையை மதித்து வர விரும்பினால், அவருடன் இணைந்து பணியாற்ற நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்,” என்றார்.
