ராமச்சந்திரன் என்கிற சந்துரு தனியார் IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர். அலுவலகம் செல்லும் போது முதல் முதலாக ஒரு பெண்ணை உணவகம் ஒன்றில் பார்க்கிறார். யாரென்று தெரியாத ஒருவருக்கு அந்த பெண் உணவு வாங்கி கொடுப்பதை பார்க்கும் சந்துருவிற்கு அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது.
அந்த பெண் அமைச்சர் பூவராக சாமியின் மகள் ஜானகியாவார். ஜானகியை தனது கட்சியின் தலைவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்க அவர் ஆசைப்படுகிறார். ஆனால் அவரது மனைவி அதனை ஏற்றுக் கொள்ளாததால் அவரையே தீர்த்துக் கட்டி விடுகிறார்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறும் ஜானகிக்கு அவருக்கு தெரிந்தவரான ஹரிஷ் என்பவர் அடைக்கலம் கொடுத்து சொந்தமாக ஒரு தொழில் தொடங்கவும் உதவி செய்கிறார்.
இந்த நிலையில் மது பான விடுதிக்கு நண்பர்களுடன் செல்லும் சந்துரு அங்கு ஜானகியை பார்க்கிறார். அவர் எதை ஆர்டர் செய்தாலும் எனது ட்ரீட் என்று சொல்லுமாறு வெயிட்டரிடம் சந்துரு கூறுகிறார்.
ஆனால் தன்னுடைய நண்பனுடன் வந்திருப்பதாக சொல்லி மறுத்து விடுகிறார். பின் ஹரிஷ் வந்து விட அவருக்கும் ட்ரீட் தருவதாக சொல்லி அவங்களுக்கு விருப்பமானதை
வாங்கி கொடுக்கிறார். இதனிடையே ஜானகி ஹரிஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவரை நடு வழியில் இறக்கி விட்டு சென்று விடுகிறார். பிறகு அந்த பக்கம் வரும் சந்துரு சில சமூக விரோத கும்பலிடம் இருந்து ஜானகியை காப்பாற்றி அவர் தங்கும் இடத்தில் விட்டு செல்கிறார்.
இந்த நிகழ்வினால் இருவரும் ஒருவர் விரும்ப ஆரம்பித்து உடனே திருமணமும் செய்து கொள்கிறார்கள். பின் தேனிலவிற்கு கொடைக்கானலில் உள்ள ரிசார்ட்டிர்க்கு இருவரும் செல்கிறார்கள்.
அந்த ரிசார்ட்டின் உரிமையாளர் சக்கரவர்த்தி அங்கு தங்கும் ஜோடிகளின் அந்தரங்கங்களை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை டார்க் நெட்டில் வெளியிட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.
அதே ரிசார்ட்டில் சந்துருவும் ஜானகியும் தங்குகிறார்கள். பிறகு ஊருக்கு வந்து தனியாக வீடு பார்த்து தங்களது வாழ்க்கையை இருவரும் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு நாள் சக்கரவர்த்தியின் லேப்டாப் சந்துருவின் காரில் இருக்க, பின் அவரே அழைத்ததும் அதனை கொடுக்க அவருடைய வீட்டிற்கு செல்லும் போது தான் சந்துருவிற்கு அவர் எப்படிப்பட்ட நபர் என்று தெரிய வருகிறது.
அதிலிருந்து சந்துருவின் மனது ஒரு நிலையில் இல்லாமல் இருக்கிறது. ஜானகியின் பிறந்த நாள் நிகழ்வின் நடந்த சம்பவம் வேறு இருவரையும் பிரித்து விடுகிறது. ஜானகியின் தந்தையும் அவரை வலை வீசி தேடி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய வேலை காரணமாக வெளியூர் சென்ற ஜானகி காணாமல் போய் விடுகிறார்.
காணாமல் போன ஜானகி என்ன ஆனார் காவல் துறையினர் ஜானகியை கண்டு பிடித்தார்களா மனஸ்தாபத்தால் பிரிந்த சந்துருவும் ஜானகியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா சக்கரவர்த்தியின் உண்மையான முகம் வெளியுலகிற்கு தெரிய வந்ததா ஜானகியின் தந்தை செய்த குற்றங்களை காவல் துறை கண்டு பிடித்ததா இறுதியில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.
சந்துருவாக ஜெய் IT ஊழியர், காதலர், கணவர், வில்லனை பழி வாங்க துடிக்கும் கோபக்கார இளைஞன் என பல முகங்களை காட்டி மாறி மாறி வருகிறார். விஜய் இனிமேல் நடிக்க வர மாட்டார் என அவரது மேனரிஸ்ஸத்தை அப்படியே பின் பற்ற ஆரம்பித்து விட்டார். பல இடங்களில் அவரது நடிப்பு செட் ஆகவில்லை.
ஜானகியாக மீனாட்சி கோவிந்தராஜன் அழகாக இருக்கிறார். கொஞ்சம் தாராளமாகவும் நடித்துள்ளார். வேறு ஒன்றும் பெரிதாக சொல்வதற்கு இல்லை.
சக்கரவர்த்தியாக கருடா ராம் அவர் சொல்லும் தொழில் நுட்ப விஷயங்கள் செய்யும் தவறான காரியத்தின் பின்னணி சற்று புதிதாக இருந்தாலும் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் தான் இருக்கிறது.
யோகி பாபுவின் நகைச்சுவை மற்றும் வில்லத்தன நடிப்பு நம்மை சோதிக்கிறது. நாயகியின் மற்றொரு காதலனாக வருபவர் வில்லத்தன நடிப்பும் மனதில் நிற்கவில்லை. படத்தில் நடித்த பிற கலைஞர்கள் அனைவரும் இயக்குனர் சொன்னவாறு செவ்வனே நடித்திருக்கிறார்கள்.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். இயக்குனர் பாபு விஜய் அந்தரங்க வீடியோவை விற்று பணம் சம்பாதிக்கும் வில்லன் அதனை கண்டு பிடித்து பழி வாங்கும் நாயகன் என்கிற கதைக்களத்தில் படத்தை உருவாக்கி இயக்கியுள்ளார்.
முதல் பாதி IT வாழ்க்கை, காதல்,கல்யாணம், சண்டை என நகர்கிறது. இரண்டாம் பாதியில் கணவன் மனைவி மோதல், வில்லனின் திட்டம், தற்கொலை என படம் செல்கிறது. இடையில் மந்திரி பிரச்சினை, பணப் பிரச்சனை ஆதரவற்றோர் இல்ல பிரச்சினை என பல காட்சிகள். காவல் துறையின் விசாரணையிலும் புதுமை இல்லை.
ஓட்டல், ரிசார்ட் மற்றும் பொது இடங்களில் தங்கும் தம்பதிகள் கவனமாக இருக்க வேண்டும் உங்களுடைய அந்தரங்கங்கள் விற்கப்படும் அபாயம் இருக்கிறது என்கிற எச்சரிக்கையை படத்தின் மூலம் காட்டியிருப்பது பாராட்டதக்கது.
மொத்தத்தில் நல்ல கரு அமைந்தும் கொடுப்பதில் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கும் இந்த படத்தை விருப்பமுள்ளவர்கள் Amazon prime video, Aha video Tamil OTT தளங்களில் காணலாம்.
