‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி வேறுபாடுகள் இன்னும் சமூகத்தில் நிலவுகின்றன என்பதை உறைக்கச் சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அதன்பின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உறுதியான இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ள ‘பைசன்’ திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதி மோதல்களும், தீண்டாமை பிரச்சனைகளும் பின்னணியாகக் கொண்டு, கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாரி செல்வராஜிடம் பத்திரிகையாளர் ஒருவர், “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு அவர் பதிலளித்ததில்,
“எனது வாழ்வில் கலைதான் எனக்கு மிகப்பெரிய போதை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்; அதனால் வேகமாக வேலை செய்யும் ஆளாகிவிட்டேன். இன்னும் பல கதைகளை சொல்ல வேண்டும் எனும் ஆசை இருக்கிறது. குறைந்தது 15 படங்களை இயக்கும் வரை நான் அரசியலுக்கு வர மாட்டேன். ஆனால், இயக்குநர் பா.ரஞ்சித் அரசியலுக்கு வருவார் என நம்புகிறேன்,” என்றார்.
