மண்வாசனை படத்தில் ரேவதியை நினைத்து கவிதைகள் எழுதுவார் நிழல்கள் ரவி. ரவி எழுதிய கவிதையை ஒரு புத்தகமாக பாரதிராஜா மண்வாசனை படத்துக்காக வெளியிட்டிருந்தால் எப்படி இருக்கும்?. சாதனை படத்தில் சிவாஜி பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்குவார். சிவாஜி இயக்கிய படம் என அந்த சலீம்-அனார்கலி கதையை ஒரு பத்து நிமிடப்படமாக வெளியிட்டிருந்தால் எப்படி இருக்கும்?
பெத்லாஹெம் குடும்ப யூனிட் படத்தில் எடுக்கப்படும் ஷார்ட் பிலிம் “ஸோல்மேட்ஸ் – ஒரு சாத்துகுடி ப்ரணயம்” படத்தை படத்தின் ரிலீசுக்குப்பிறகு ஒரு வாரம் கழித்து யூடியூபில் வெளியிட்டிருக்கிறது பெத்லஹெம் குடும்ப யூனிட் டீம். 1.2 கோடி பேர் அதை பார்த்திருக்கின்றனர். அதன் படி பார்த்தால் படத்தில் ஹீரோக்கள் இரண்டு பேர். மெயின் ஹீரோ. ஷார்ட் பிலிம் ஹீரோ. ஷார்ட் ஃபிலிம் நாயகி படத்திலும் வருவது போல் செய்து ஒரு புது முயற்சி செய்திருக்கிறார்கள்.
பெத்லஹெம் குடும்ப யூனிட் படம் ஒரு அழகான ரோம்காம் ஜானர். ஒரு ஃபீல்குட் அனுபவம்.
படம் முழுக்க சின்னச் சின்ன காமெடியில் அசத்தி இருக்கிறார்கள்.
ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என இந்தப்படத்தைப்பார்த்து படிக்கலாம்.
95ல் அரவிந்த் சாமி-ஸ்ரீதேவியை வைத்து எடுக்க தயாரெடுப்பிலிருந்த ‘அன்னா’ என்கிற படம் எடுக்க முடியாமல் நின்று போனது. அதற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலை இந்தப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். யேசுதாஸ்-சித்ராவின் 90கால மாயக்குரல்கள் பிரமாதம்.
நிவின் போலி இதற்கு முன் செய்த ஓம் சாந்தி ஓஸானா, சர்வம் மாயா படங்களில் செய்த அதே வயது முதிர்ந்த ஆண்-வயது குறைந்த பெண் காதலை அழகாக சொல்லி இருக்கிறார்கள்.
நிவினுக்கு MP3 king, மமிதாவுக்கு Room-17 என Code word பெயர்கள். தெய்யம் கலைக்காரன் வில்லன். ஆண் பிள்ளைகள் வீட்டில் யாரும் இல்லையென்றால் வீடியோ கேசட் பார்ப்பது போல்(90களில்) பெண் பிள்ளைகள் சரக்கு அடிப்பது என புதுமைகளை சேர்த்து புதிதாக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மலையாளிகள் தண்ணியடிப்பதை குளோரிஃபை பண்ணாமல் இருக்க மாட்டார்கள் போல. அதுவும் கோவா டூர் போகும் போது பாட்டிலுக்காக அலைவதும், ,ரயிலை மிஸ் செய்து விட்டு அடுத்த ஸ்டேஷனில் பிடிப்பதும்….அடடா…மலையாளிகள் செய்த புண்ணியம் அவர்கள் நாட்டில் நல்ல சரக்கும் கிடைக்கிறது.
மமிதா பைஜு நடிப்பால் அசத்துகிறார். அவருக்கும்-நிவினுக்குமான கெமிஸ்ட்ரியில் படம் பார்க்கும் நாம் வீழ்ந்து போகிறோம். காதலுக்கு மரியாதை போன்ற அந்த எமோஷனல் க்ளைமேக்ஸ் அருமை. படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுக்கும் வேலை கொடுத்திருக்கிறார்கள்.
ஃபகத்பாஸில், திலீஷ்போத்தன், ஷ்யாம் புஷ்கரன் டீமின் கும்பளங்கி நைட்ஸ், ஜோஜி, ப்ரேமலு படத்திற்குப்பிறகு ஒரு நல்ல படத்தை நமக்கு தந்திருக்கின்றனர். குடும்பத்தோடு ரசிக்கலாம்.
