இசையமைப்பாளர் தேவா, எழுபதுகளின் இறுதியில் இருந்தே இசையமைப்பாளர் கனவுகளைச் சுமந்து, வாய்ப்பிற்காக வெகுகாலம் போராடி, சில படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி, கடைசி நேரத்தில் அவை கைக்கூடாமல் போய், ஒருவழியாக 1986 ல் ‘மாட்டுக்கார மன்னாரு’ படம் மூலமாக அறிமுகம் நிகழ்ந்து, 1989 ஆம் ஆண்டு வெளியான ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படத்தின் பாடல்கள் வழியாக கவனத்தைப் பெற்றது அவரது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.
‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படத்தின், ‘ஆத்து மேட்டு தோப்புக்குள்ள’, ‘ஆறெங்கும் தானுறங்க’ , ‘முகமொரு நிலா’ என கவனிக்க வைத்த பாடல்களைத் தந்திருந்தாலும், 1990 ஆம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தின் பாடல்கள் வழியாகத்தான் தேவா என்கிற இசையமைப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார் என பரவலாக அறியப்பட்டது நிகழ்ந்தது. அந்தப் படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளராக தமிழக அரசின் விருதும் அவருக்குக் கிடைத்தது.
‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தின் பாடல்களின் பெரு வெற்றியால் , தேவா அவர்களுக்கு வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின. இருந்தாலுமே அப்போது வரை ராஜாவின் வசமே அதிக எண்ணிக்கையிலான படங்கள் அந்தக் காலகட்டத்திலும் இருந்தன. ராஜாவிற்கு 60% படங்கள் போக, மீதம் உள்ள இசையமைப்பாளர்கள் அனைவருக்குமாக 40% என்கிற அளவில் அந்த வாய்ப்புகளை அணுகலாம்.. அவற்றில் தேவாவின் கணக்கில் வருடத்திற்கு பத்து பன்னிரெண்டு திரைப்படங்கள் என்ற அளவில் 1990 – 1993 வரையிலான காலகட்டம் இருந்தன.
இந்தக் காலகட்டத்தில், ,’நம்ம ஊரு பூவாத்தா’ , ‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘புது மனிதன்’ , ‘தெற்குத்தெரு மச்சான்’ , ‘சோலையம்மா’, ‘வசந்தகால பறவை’ , ‘கிழக்குக் கரை’ , ‘மறவன்’ , ‘அண்ணாமலை’, ‘சாமுண்டி’ , ‘சூரியன்’ , ‘ஊர் மரியாதை’, ‘கட்டபொம்மன்’ என கவனிக்க வைத்த பாடல்களைக் கொண்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். இதே காலகட்டத்தில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளே வருகிறார்.. ரஹ்மானின் பயணமானது ஒன்றிரண்டு விதிவிலக்குகள் தாண்டி பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் என்பதாக இயல்பாகவே அமைந்துவிட, அவரின் பாதை தனியாக அமைந்துவிட்டது.
இந்தக் காலகட்டத்தில் கிராமியக் கதைக்களங்கள் நிறைய வந்தன.. அவர்களுக்கு ராஜாவின் இசையே தேவை.. ஆனாலும், ராஜாவே எல்லோருக்கும் இசையமைப்பது இயலாத காரியம் என்கிற சூழலில் ராஜாவைப் போல பாடல்கள் கொடுப்பவராகவும் வேண்டும்.. பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாகவும் வேண்டும் என்கிற தேர்விற்கு தேவா கச்சிதமாகப் பொருந்த, 1994 -ல் இருந்து தேவாவின் இசையிலான படங்களின் எண்ணிக்கை முன்னிலை பெறத் தொடங்கின.
தேவா, பட்ஜெட் ஃப்ரெண்ட்லி மட்டுமல்லாமல் பழகவும் ஃப்ரெண்ட்லியாக இருந்ததால், சிறிய முதலீட்டுப் படங்களுக்கு மட்டுமல்லாமல், பெரிய இயக்குநனர்களின் சாய்ஸாகவும் மெல்ல மாறத் தொடங்கினார். இந்த காலக்கட்டத்தில்தான், போலச் செய்தல் என்கிற சிக்கலுக்குள்ளும் அவர் மாட்டிக் கொண்டார். அதாவது, இவரைத் தேடி வரும்போதே ஆங்கிலப் பாடல்கள் தொடங்கி ஹிந்தி , தெலுங்கு என பிற மொழிகளில் ஹிட்டடித்த மெட்டுக்களை காட்டி, அதே போல தங்களுக்கும் வேண்டும் என்பதனை டிமாண்ட்டாக வைக்கிற போக்கிற்கு, தேவா இசைந்து போக ஆரம்பித்துவிட்டார்.
அவரின் நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்திருந்ததன்படி அன்றைய சூழலில், முடியாது என மறுக்கிற இடத்தில் தான் இல்லை என்று சொல்லி இருந்தார். பின்னாளில் இணையம் அறிமுகமாகி யார் எந்தப் பாடலை எங்கிருந்து எடுத்தாண்டார்கள் என்பதெல்லாம் தெரிந்துவிடும் என்கிற விஷயமே அப்போது யோசித்திராத காலமாகவும் அது இருந்ததால், கேட்டதை கொடுப்போம் என்று இயங்கியதால் பின்னாளில் தேவா என்றாலே காப்பி கேட் என்கிற மாதிரியான விமர்சனத்திற்கும் ஆளானார்.
‘ராஜதுரை’ படத்தின் ‘ஊசிமலக்காடு’ பாடல்தான் தேவா , முதலில் பிறமொழி பாடலைத் தழுவி கொடுத்த நினைவு. ‘மதுமதி’ திரைப்படத்தின் ‘ஓ ஓ மதுபாலா’ பாடலேகூட ஹிந்தியின் தழுவல்தான் என்றாலும் இங்கே எஸ்.பி.பி அதனை தமிழ்தான் அதன் ஒரிஜினல் என்பது போல பாடியிருப்பார். போலவே ‘சின்ன முத்து’ திரைப்படத்தின் ‘இதழோரம் தொட்டு வைப்பது சுகமா’ பாடல் , அதே காலகட்டத்தில் ஹிந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ‘மொஹ்ரா’ திரைப்படத்தின் ‘ Tu Cheez Badi Hai Mast’ பாடலின் தாக்கத்தில் உருவான மெட்டாகத்தான் கொடுத்திருந்தார். ஆனால், ‘விஷ்ணு’ திரைப்படத்தின் ‘தொட்டபெட்டா ரோட்டுமேல’ பாடல் , அப்படியே ஹிந்தி ‘ராஜா’ திரைப்படத்தின் ‘Akhiyaan Milaoon Kabhi’ பாடலை பிரதியெடுத்து ஒலித்தது. ‘பாட்ஷா’வின் ‘நீ நடந்தால் நடையழகு’ பாடல் ஆர்.டி.பர்மனின் ‘Dilbar Dil Se Pyare’ பாடலின் தழுவலாகவும், ‘ஆஹா’ திரைப்படத்தின் ‘முதன் முதலில் பார்த்தேன்’ பாடல், ‘தீவானா’ திரைப்படத்தின் ‘Sochenge Tumhe Pyaar’ பாடலின் தமிழாக்கமாகத்தான் செய்திருந்தார்.
தேவா, இப்படியாக வளைந்து கொடுக்கிற குணத்தோடு இருந்ததால், தங்களுக்கு தேவையான பாடல்களோடு அவரை அணுகி தமிழாக்கிக் கொடுத்தால் போதும் என்கிற கோரிக்கைக்கு அவர் No சொல்லாமல் விட்டது பிழையாகிப் போனது. இந்த டைமில்தான் ரஹ்மான் போலவும் பாடல்களைக் கொடுக்கிற டிரான்சிஷனுக்கு தேவா மாறி, ராஜா போலவும் பாடல் கிடைக்கும், ரஹ்மான் போலவும் பாடல் கிடைக்கும் என்கிற மாதிரி ஒரு அவைலபிலிட்டியையும் செட் செய்தார். அதன்வழி அமைந்ததுதான் , ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘முகவரி’ மாதிரியான படங்கள். இந்தப் படங்களின் பெரும்பான்மைப் பாடல்கள் சர்வதேச ஆல்பங்கள் பலவற்றின் தழுவல்களாகத்தான் இருந்தன.
ஆனால், back street boys மாதிரியான உலகலாவிய ஹிட் ஆல்பங்களையும் தழுவியதால், இறுதியில் என்னாயிற்று, ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ மாதிரி தேவாவின் ஒரிஜினல் ட்யூன்களும் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்பட்டு, அவரின் திறமை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக மாற்றுவதாக அமைந்தது.
பிறமொழி பாடல்களை தமிழாக்கிக் கொடுக்கச் சொல்லி கேட்டு வருவோர் ஒரு பக்கமிருந்க்க, இன்னொரு பக்கம் தேவாவிடமிருந்து, ‘தமிழச்சி’ , ‘கங்கைக்கரைப் பாட்டு’, ‘திருமூர்த்தி’ , ‘மகாபிரபு’, ‘பாரதி கண்ணம்மா’, ‘கோகுலத்தில் சீதை’ , ‘காதல் கோட்டை’, ‘பாஞ்சாலங்குறிச்சி’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் தேவாவின் ஒரிஜினல் ட்யூன்களோடு வந்தும் ஹிட்டடித்தன. தேவாவின் திறமையை முழுமையாக நம்பி, அவரிடமிருந்து சிறந்த மெட்டுக்களை கொண்டு வந்த இயக்குநர்களில் ஆர்.சுந்தர்ராஜன் முதன்மையானவர் என்பேன். ‘என் ஆசை மச்சான்’, ‘காந்தி பிறந்த மண்’, ‘சீதனம்’ என தேவாவிடம் அற்புதமான மெட்டுக்களை கைக்கொண்டவர் அவர். அடுத்து இயக்குநர் சேரனைச் சொல்லலாம்.
போலவே, இயக்குநர்கள் டாமினேட் செய்யாத, தன் போக்கிற்கு மெட்டமைக்க விட்ட சிறு பட்ஜெட் திரைப்படங்கள் பலவற்றில் தேவா நல்ல நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ‘செல்லக்கண்ணு’ திரைப்படத்தின் ‘வண்டியில மாமன் பொண்ணு’, ‘புன்னமரக்கிளையில் சின்ன குருவி ரெண்டு’, நிலா’ திரைப்படத்தின் ‘ராசா மேல ஆச வச்சு ராசகுமாரி’, ‘தாய்மாமன்’ திரைப்படத்தின் ‘அம்மன் கோயில் வாசலிலே’, ‘புது நிலவு’ திரைப்படத்தின், ‘தென்பாண்டித் தென்றல் வந்து’ மற்றும் ‘புது நிலவு’ , ‘செவத்த பொண்ணு’ திரைப்படத்தின் ‘சித்திரையில் திருமணம்’ , ‘ரோஜாவைக் கிள்ளாதே’ திரைப்படத்தின் ‘யமுனா நதிக்கரையில்’ , ‘கருப்பு வெள்ளை’ திரைப்படத்தின் ‘ஓ சொர்ணமுகி’, ‘ராஜபாண்டி’ திரைப்படத்தின் ‘மகராணி மகராணி மாளிகை மகராணி’, ‘ஜல்லிக்கட்டுக் காளை’ திரைப்படத்தின் ‘சிறுமல்லிப் பூவே’, ‘தூக்கணாங்குருவி ரெண்டு’ உள்ளிட்ட பல பாடல்கள் தேவாவின் தேனிசை கணக்கில் உண்டு.
இன்னும்கூட தொடக்கத்தில் இருந்து எடுத்தால் ,’வாசலில் ஒரு வெண்ணிலா’ படத்தின் ‘என் ஊரு மதுரபக்கம்’, ‘ராஜதுரை’ படத்தின் ‘ஒரு சந்தன மேனியில் வந்தது சந்திர பிம்பம்’, ‘நம்ம அண்ணாச்சி’ படத்தின் ‘நீலகிரி மல ஓரத்துல’, ‘சேர சோழ பாண்டியரெல்லாம்’, ‘புருஷ லட்சணம்’ படத்தின் ‘செம்பட்டுப் பூவே’ , ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ படத்தின் ‘அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே’ என தேவாவின் கணக்கில் ரசித்துக் கேட்க கூடிய பல பாடல்கள் உண்டு. அவற்றை எல்லாமும் ரசித்தவர்களால், தேவா அவர்களை போகிற போக்கில் ஒட்டு மொத்தமாக காப்பி கேட் என்கிற அடைமொழியில் அடக்குபவர்களைப் பார்க்கும்போது கோபம் வருகிறது.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்கள் 180 மேல் என இணையம் சொல்கிறது. அவற்றில் மூன்றே படங்களுக்குத்தான் தேவா இசையமைத்திருக்கிறார். இருந்தும், ரஜினி படம்னா அதுக்கு தேவாதான் என ஒரு எண்ணத்தை இந்த மூன்று படங்களிலேயே உருவாக்கியிருக்கிறார் என்பதேகூட தேவாவின் சாதனைகளில் ஒன்று.
தேவாவின் திடீர் மறைவில் , அவருக்கான மரியாதையாக என்ன செய்ய இயலும் என யோசித்ததில், வெளியான நாட்களில் ரசித்து, காலப்போக்கில் மறந்து போன அவரின் பல பாடல்களைக் கேட்பது அவருக்கான மரியாதையாகவும், எனக்கான ஆறுதலாகவும் இருக்குமென்று எண்ணி நேற்று இரவில் இருந்து இக்கட்டுரையில் குறிப்பிட்ட பாடல்களை எல்லாமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு ரசிகனாக என்னால் செய்ய முடிந்த சிறந்த புகழஞ்சலியாக அதுவாகத்தான் இருக்க முடியும் எனவும் நம்புகிறேன்.
