நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நடிகை ஜோதிகா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, போராட்டக் குழுவினர் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது, நீட் விவகாரத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் எந்தவித சமரசமும் இருக்காது என போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றதாகவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், நடிகை ஜோதிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களுடன் நான் துணை நிற்கிறேன். நமது நாட்டின் எதிர்காலத்திற்காகவும், ஜனநாயக இந்தியாவிற்காகவும், சீர்திருத்தப்பட்ட கல்வி முறைக்காகவும் நான் குரல் கொடுக்கிறேன். சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் போன்றவர்களைப் போல எங்கள் குழந்தைகள் வளர வேண்டும் என்று ஒரு தாயாக விரும்புகிறேன்.
ஜென் Z இளைஞர்கள் எந்த அச்சமும் இன்றி தங்களது கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பது பெருமைக்குரியது. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ‘நாம்தான் இந்தியா’ என்பதை நிரூபித்துள்ளீர்கள். அழுத்தங்களையும் பயத்தையும் தகர்த்தெறிந்து, எங்களுக்கும் அச்சமின்றி பேசும் தைரியத்தை அளித்ததற்கு நன்றி. ஜெய் ஹிந்த்” என்று ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.
