பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியின் மனதோடு மனோ நிகழ்ச்சியில் பங்கேற்றதை, அவரின் மறைவிற்கு பின்பு மீண்டும் வலையேற்றி இருக்கிறார்கள்.
இதுநாள் வரை ஜானகி அம்மாவை பாடகி என்கிற கோணத்தில் மட்டுமே யோசித்திருப்பபோம் அல்லவா, இந்த நிகழ்ச்சியில் அவரிடம் வெளிப்பட்ட குழந்தைத்தனம், உச்சமான நகைச்சுவை உணர்வு, நேர்த்தியான கதை சொல்லி மற்றும் தமிழை தாய்மொழிக்கு நிகராக நேசிக்கும் குணம் சொல்லப்போனால் கண்ணதாசன் வரிகளை அவர் வியந்து அவற்றை விவரிக்கும் போது, தமிழ்ப்பற்றை அவர் எத்தனை தூரம் கொண்டிருந்தார் என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்றதெல்லாம் ரசிக்குபடி இருந்தது.
நான்கைந்து வயது இருந்த போதே கேள்வி ஞானத்திலேயே சிறப்பாக பாடுகிற திறமையை அடையாளம் காண்கிற இவரின் பெற்றோர், முறையாக பயற்சி கொடுக்க குரு ஒருவரிடம் சேர்க்க, அவரோ, ஜானகி அவரகளை ஒரு பாடல் பாட சொல்ல, ஜானகி அவர்கள் பாடியதைக் கேட்டு வாயடைத்துப் போய், “உனக்கெல்லாம் சொல்லிக் கொடுக்க தேவையே இல்லை.. நீ நிறையே கேளு.. அதுவே உனக்கு போதும்” என்று சொல்லியிருக்கிறார்.
தன் கணவரை , அவருக்கே தெரியாமல் காதலித்த அனுபவத்தை நகைச்சுவையோடு அவர் சொன்ன விதத்தில் இருந்த குறும்புத்தனத்தைப் பார்த்து, வாய்விட்டு சத்தமாக சிரித்துவிட்டேன். அதற்கு மனோ கொடுத்த ரியாக்ஷனும், “அப்போ இங்கிட்டுதான் மொதல்ல ஆரம்பிச்சா?” என்று கேட்டதும் ரகளையாக இருந்தது.
“என் வீட்டுக்காரருக்கு பொண்ணு பாக்க அவங்க குடும்பத்தோட சேந்து நானும் போயிருக்கேன் .. ரெண்டு மூணு பொண்ணையும் பாத்தேன்.. அப்புறம் கடைசிலதான் வீட்டுக்குள்ளயே ஒரு பொண்ணு இருக்கே.. எதுக்கு வெளில தேடுறீங்க” என உறவினர் ஒருவர் எடுத்துக் கொடுக்க ஜானகி அம்மாவின் காதல் நிறைவேறியதை ரொம்ப சுவைபட சொன்னதெல்லாம் ட்ரெண்டியான ஒரு காதல் கதையைக் கேட்டது போன்ற சுவார்ஸ்யம்.
ஜானகி அவர்களின் திரைப்பாடல் பயணத்திற்கும் பிள்ளையார் சுழியைப் போட்டதும் அவரின் கணவர்தானாம். அப்போது , அவர் ஜானகியின் கணவர் ஆகியிராத நேரம்.. ஆனால், ஜானகி அவர்களுக்கு அவர் மீது காதல் இருந்த நேரமாகும் அதை தெரிவித்திருந்தார்.
‘சிங்கார வேலனே தேவா’ பாடல் மூலம் பெரிய ரீச்சை அவர் அடைந்தாலும், அதற்கு முன்பாக யார் இசையில் அறிமுகம் ஆனார், எந்தப் பாடல் முதலில் வெளி வந்தது, அன்றைய நாளில் பி.லீலா , ஜிக்கி, சுசீலா, ஜமுனாராணி உள்ளிட்ட பாடகிகள் எல்லோரும் சகோதரிகள் போல பழகியதையும் , சிங்கார வேலனே தேவா பாடலுக்கு, நாதஸ்வரத்துடன் டூயட் பாடுவது போல அந்த ரேஞ்சிற்கு பாட ஜானகியால்தான் முடியும் என சக பின்னணி பாடகி பி.லீலாதான் ஜானகியை பரிந்துரை செய்தாராம் அவற்றை எல்லாம் குறிப்பிட்டு, இப்படியெல்லாம் சக பாடகியை இன்னொரு பாடகி பரிந்துரை செய்யவெல்லாம் எத்தனை பெரிய மனம் வேண்டும் என்று நெகிழ வைக்கிற விதத்திலும் பேசினார்.
‘காற்றுக்கென்ன வேலி’ பாடலை பாடச் சொல்லி மனோ கேட்க, அந்தப் பாடலை பாடுவதற்கு முன்பாக, வரிகளின் சிறப்பையும் கண்ணதாசனையும் அவர் வியந்து சொன்னது சிறப்பான தருணமாக இருந்தது.
ராஜாவிடம் பாடிய பாடல்களில் ‘அன்னக்கிளியே ஒன்ன தேடுதே’, ‘மச்சான பாத்தீங்களா’, ‘சின்ன சின்ன வண்ணக்குயில்’ ஆகியற்றை பாடிக் காட்டினார். அவர் இந்த நிகழ்ச்சியில் பாடிய போது அவரின் வயது 72. ஆனாலும் அதே ஒரிஜினல் ஸ்கேலிலேயே பாடிக் காட்டினார். சில இடங்களில் பிசிறு தட்டியது. அதையும் அவரே சொல்லி, நான் அப்போ ஒரிஜினலா பாடுனத மட்டும் கவனிச்சு , நீங்க பாடுங்க.. இதெல்லாம் வேண்டாம் என சிரித்தது குட்டி ஹைக்கூ.
‘தூக்கமும் கண்களை தழுவட்டுமே’ பாடல் பதிவின் போது , மூச்சுப் பிரச்சனையால் அவதி பட்டாராம். ஆனால், அந்தப் பாடலை முழு ஆர்கஸ்ட்ராவோடு சிங்கிள் டேக்கில் ஓகே செய்துவிட்டு, ஹாஸ்பிடல் சென்றாராம். அது போன்ற இன்னும் இன்னும் நிறைய சுவாரஸ்யங்கள் இந்த நேர்காணல் முழுவதும்.
நிகழ்ச்சியினை ஜெயா டிவி யூடியுப் பக்கத்தில் பார்க்கலாம். பார்க்காதோர் அவசியம் பாருங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.
