1000067645 h

‘அலுங்குறேன் குலுங்குறேன்’, ‘கூட மேல கூட வச்சி’,‘ஜிமிக்கி கம்மல்’ பிடிக்க காரணம் என்ன?

11 / 100 SEO Score

2015 ஆம் ஆண்டு வெளியான சண்டிவீரன் படத்தில் இசையமைப்பாளர் அருணகிரி கொடுத்த கேட்சியான டியூன் இந்த ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ பாடல்.

மண்வாசம் வீசும் இம்மாதிரி மெட்டு அமைப்பிற்கும், பின்னணி இசைக் கோவைக்கும் எப்போதுமே நம்ம ஊரில் வரவேற்பு இருக்கும். என்னதான் மேற்கத்திய சாயல் மெட்டுக்களை டிரெண்ட் என்கிற அடிப்படையில் அதிகமாக அடித்துத் தள்ளினாலும், அவற்றில் பல கேட்கவும் நன்றாக இருப்பினும், இப்படி அரிதாக வரும் கிராமிய மெட்டுகளே நம்மின் ஆதி ஜீன்களுக்கு ஆசுவாசம் தருவனவாக இருப்பதாக ஓர் எண்ணம் உண்டு. இது கிராமியப் பின்புல ஆட்களுக்கு மட்டும்தான் என்றும் நினைக்கவில்லை. நகர இளைஞர்களையும் இந்த ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ தலையாட்ட வைப்பதற்கும், இந்த நம் மண்ணின் இசைக்கு மயங்கும் தூண்டல் மரபு வழியாகவோ சூழல் வழியாகவோ நிகழ்வதாக இருக்க வேண்டும் என்பதும் இதன் நீட்சியான என் அனுமானம். நிற்க, அனுமானம் மாத்திரமே.

மலையாளப் படங்கள் எத்தனை புதுமையான கதைக்களங்களில் பயணித்தாலும், அவர்களின் திரையிசையில் அவர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான மெட்டுக்கள் நிறைய இருப்பதைக் கவனிக்கலாம். நாடோடி பாடல்கள் போலவோ, ஆதிக்குடிகளின் பாடல்கள் போலவோ சில பாடல்களை மலையாளிகளின் எல்லாத் தரப்பு மக்களும் முக்கியமான நிகழ்வுகளில் பாடுவதைக் கவனித்திருப்போம்; அவற்றை அவர்களின் திரைப்படங்களிலும் பயன்படுத்திக் கொள்வார்கள். புதிய மெட்டுகளில் கூட அப்படியான சாயல் இருக்கும் பாடல்கள் பெரிய அளவில் அங்கே ஹிட்டடிக்கும். சமீபத்திய உதாரணம் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல். இப்படி தங்களின் அடையாளத்தை பெருமையாய் கடைப்பிடிக்கும் போக்கு அங்கே காணக் கிடைக்கும். ஆனால் நம்ம ஊரில் அப்படி ஒரு பிரயத்தனம் எதையும் மேற்கொள்வதில்லை. எனினும் இந்த ‘அலுங்குறேன் குலுங்குறேன்’, ‘கூட மேல கூட வச்சி’ மாதிரி பாடல்கள் வரும் போது நமக்கெல்லாம் அவை பிடிக்கிறது என்பதே, நம்மின் மண்ணின் குணம் நம்மிடையே தொடர்ந்த வண்ணம் இருக்கிறது என்கிற அடிப்படையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இந்தப் பாடல் சற்றே 90களின் பாடல்களின் சாயலில் இருப்பதால் என் போன்ற நடுத்தர வயது ஆட்களுக்குப் பிடிக்கிறதோ என்கிற கோணமும் உண்டு. காரணம், இந்த மெட்டு போல தொண்ணூறுகளில் சில பாடல்கள் வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ராஜாவின் இசையில் சாமி போட்ட முடிச்சு என்கிற படத்தில் ‘நீலவேணி அம்மா நீலவேணி’ என்றொரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் பல்லவியின் முடிவில் “மாக்கான்னு நெனைக்காதக்கா… கேக்காம பதில் சொல்லக்கா” என்றொரு இசைக் குறிப்பு வரும். உச்சஸ்தாயியில் பயணிக்கும் அந்த இசைக் குறிப்பை சற்றே கீழ் ஸ்தாயியில் மாற்றினால் ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ மெட்டு கிடைத்துவிடும். ஆனாலும் இன்றைய இளைஞர்களுக்கும் இந்த மெட்டு பிடித்துப் போயிருக்கிறது என்பதன் பின்னணியில், இம்மாதிரி மெட்டுகளுக்கு 90களின் சாயல் என்பதைவிட தெம்மாங்கு சாயல் நம்ம ஊரில் எப்போதும் எடுபடும் என்கிற அடையாளத்தைக் கொடுப்பதே சரியாக இருக்கும்.

இப்பாடலைப் பாடியிருக்கும் பிரசன்னா ராவ் – நமீதா பாபு இணை சிறப்பான பங்களிப்பைச் செய்திருந்தாலும், முந்தைய தலைமுறை பாடகர்கள் தெம்மாங்கு மெட்டுக்கள் என்றால் மண்ணின் மனத்தை குரலில் கொண்டு வர காட்டும் பிரத்யேக மெனக்கெடல்கள் போல இன்றி, மற்ற பாடல்களை எப்படி அணுகுவார்களோ அதேபோலவே பாடியிருப்பதாகத் தோன்றும். குறிப்பாக ஆரம்ப காலத்திலிருந்தே பாடகர் ஹரிஹரனின் பாணியை அப்பட்டமாகத் தொடர முயற்சிப்பவர் பிரசன்னா; இதில் கூட அந்த டிராக்கில்தான் பயணித்திருப்பாரேயன்றி, மண்வாசத்துக்கான பெரிய மெனக்கெடல்கள் செய்திருக்காத தொனியே கேட்கக் கிடைக்கும்.

காட்சி வடிவிற்குள் நுழையும்போது இந்த மெட்டு இன்னும் பெரிதாக ஈர்க்கும். பாடலின் பெரும் பகுதி மாண்டேஜ் காட்சிகளிலேயே நகரும். வசனக் காட்சிகளாக நீட்டி முழக்க வேண்டிய அவசியமில்லாமல், அதே வேளையில் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்க வேண்டியவற்றைத் தொகுத்து மாண்டேஜ் பாடல் காட்சிகளாக நகர்த்துவது சினிமாவில் ஒரு யுத்தி. பரபரப்புக்காகக் கூட இந்த யுத்தி பயன்படுத்தப்படுவதும் உண்டு. இங்கே காதலர்களுக்கிடையே இருக்கும் நெருக்கத்தையும், அந்தக் காதலின் வளர்ச்சி நிலையையும் காட்டுவதற்காக இந்த மாண்டேஜ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

தபூ சங்கரின் கவிதைகள் கவிதைகளே இல்லை என்பது போல இலக்கியப் பரப்பில் பெரும்பாலானோரால் பகடி செய்யும் போக்கு உண்டு. அன்றாட நிகழ்வுகளுக்குள் விரவிக் கிடக்கும் கவிதைத் தருணங்களை எளிமையான வடிவில் பலராலும் ரசிக்கப்படும் வகையில் கொடுக்கப்பட்ட ஒரு கலை வடிவம் என்கிற வகையிலேனும் அவை கொண்டாட்டத்திற்குரியவை. அவரின் பாணியை கையாண்டு ஒரு கூட்டமே எழுத்துலகிற்கு வந்தது என்பதும் மறுப்பதற்கில்லை. இந்தப் பாடலில் அதர்வாவும் ஆனந்தியும் வெள்ளரிக்காய் சாப்பிடும் காட்சி ஒன்றும், ஆனந்தியின் கால் விரலை அதர்வா தன் கால் விரலால் சுரண்டுவது போல ஒரு காட்சியும் இருக்கும். இந்தக் காட்சிகளை எழுத்தாக்கினால் அவைதான் தபூ சங்கர் கவிதைகள்; அல்லது தபூ சங்கரின் கவிதைகளைக் காட்சிப்படுத்தினால், இந்தக் காட்சிகளைப் போன்றுதான் நம்மிடம் குறுநகையைக் களவாடும் இயல்போடு அவை இருக்கும். இப்படி இந்தப் பாடலில் குட்டிக் குட்டியாக நிறைய கவிதைத் தூவல்கள் காட்சி வடிவில் விரவிக் கிடக்கும்.

மாண்டேஜ் பாடல் காட்சிகள் என்றால் அவற்றில் நடன இயக்குநருக்கு பெரும்பாலும் வேலையிருக்காது; இந்த வகைப் பாடல்கள் இயக்குநரின் எண்ண ஜாலம்தான். அந்த வகையில் இந்தப் பாடலின் பெரும்பான்மையான ஐடியாக்கள் இயக்குநர் சற்குணத்திற்குள் இருக்கும் ரசனையாளனை நமக்கு அடையாளம் காட்டும்.

இந்தப் பாடலில் நடன இயக்குநரின் பங்கு இருந்திருக்குமெனில், பாடலின் தொடக்கத்தில் பெண்டுலங்கள் இரண்டு எதிரெதிர் திசையில் ஒன்றை ஒன்று பார்த்து அசைவது போல அதர்வாவும் ஆனந்தியும் செய்யும் அந்தச் சின்ன நடன அசைவு, நாயகியின் கைவிரலில் நாயகன் சொடுக்கெடுத்தல், நாயகனும் நாயகியும் கையின் மேல் மை வைத்து வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பைப் போல செய்கிற காட்சி, மெல்லிய தோள் குலுக்கல் நடை என இந்தக் காட்சிகளில்தான் இருந்திருக்கும். எனினும் குறைவான நடனப் பங்களிப்பு என்றாலும் அவை ரசனையாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இருபதுகளின் இளைஞனையும், பதின்மத்தின் யுவதியையும் காதலர்களாகப் பார்ப்பதே இப்பாடலுக்கு ஓர் அழகியல் தன்மையைக் கொடுத்துவிடும். குறிப்பாக தாவணி ஆனந்தியின் துறுதுறு எக்ஸ்பிரஷன்கள் ஹைலைட்டாக அமைந்திருக்கும்.

இறுதியாக பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு. மன்னார்குடி – ஒரத்தநாடு – பட்டுக்கோட்டை ஆகிய ஆயுத எழுத்து அமைப்பிலான இந்த மூன்று ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளின் வண்டல் மண் காட்சிகளை அழகோடு அள்ளி வந்திருக்கும் அவரின் கேமரா வியக்க வைக்கும். குறிப்பாக கதிரடிக்கும் இயந்திரத்தில் இருந்து கொட்டும் நெல்மணிகளை அதர்வா ஆனந்தியின் மேல் அடிக்கும் ஷாட், ஏரியல் வியூவில் தெரியும் பசுமை வயல்வெளிக் காட்சி, மீன்கொத்தி ஒன்று மீனைக் கவ்விப் பறக்கும் ஷாட், மற்றும் நாயகனும் நாயகியும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு காட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் ஆறுமுகக் கள்ளிச்செடி — இவற்றையெல்லாம் பார்த்ததும் “கேமராமேன் யாருய்யா?” என ஆர்வமாய் தேட வைத்தார்.

தனது மண் சார்ந்த அடையாளங்களை திரைக்காட்சிகளாகப் பார்க்கையில் இத்தனை புல்லரிக்குமா என்பதை இயக்குநர் சற்குணத்தின் திரை வருகைக்குப் பிறகுதான் தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன். அதற்கு முன் வந்த கிராமியப் படங்கள் ஈர்க்கவில்லை என்பது இதன் அர்த்தமில்லை. 16 வயதினிலேயையோ, பருத்திவீரன்யையோ, சின்ன கவுண்டர்யையோ நாம் ரசித்ததைவிட வேறொரு உணர்ச்சி நிலையில் அந்த மண் சார்ந்த மனிதர்களை அது கவர்ந்திருக்கும் என்கிற ஒரு விஷயம் சற்குணத்தின் வருகையில் எனக்கு தெரிய வந்திருக்கிறது.

சண்டிவீரன் மொத்தமாக ஒரு படம் என்கிற அளவில் சொதப்பியிருந்தாலும், தனித்தனிக் காட்சிகளாக வண்டல் மண் வாழ்வியலை நுட்பமாகப் பதிவு செய்திருந்த படம் என்பதும் இந்தப் பாடலோடு சேர்த்து குறிப்பிடத் தோன்றுகிற விஷயமாக இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top