இசாகப்பட்டணம் என்ற துறைமுகப் பகுதியை மையமாகக் கொண்டு, அதிகாரம், அரசியல், தொழிலாளர் ஆதிக்கம் மற்றும் குடும்ப மோதல்கள் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கு வெப் சீரீஸ்தான் Isakapatnam.
கதை என்ன?
ஒன்றுமில்லாமல் இசாகப்பட்டணத்திற்கு வரும் நாயுடு, குறுகிய காலத்திலேயே அந்தப் பகுதியின் செல்வாக்கு மிக்க நபராக உயர்கிறார். தொழிலாளர் தலைவராக இருந்த சின்னாராவை வழியிலிருந்து அகற்றி, அந்தப் பகுதியையே அசைக்க முடியாத அளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். காவல் துறையும், அதிகாரத்தில் இருப்பவர்களும் நாயுடுவுக்கு பக்கபலமாக இருப்பதால், அவரை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகிறது.
ஆனால், நாயுடுவின் மகள் பாரதி, தந்தையின் செயல்பாடுகளை ஏற்க மறுக்கிறார். அவர் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, சமூகப்பணிகளில் ஈடுபடுகிறார். NGO-க்கு நிதியுதவி செய்வதும், தந்தையின் நிறுவனத்திற்கு எதிராக போராடுவதும் பாரதியின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுகிறது. இது நாயுடுவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில், தன்னுடைய எதிரியாக இருக்கும் பிரதாப் வர்மாவை சமாளிக்க, தனது மகள் பாரதியை அவருக்கே திருமணம் செய்து வைக்க நாயுடு முடிவு செய்கிறார். ஆனால் பாரதிக்கு அந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை. அதிலும், நாயுடுவின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரை பாரதி காதலித்து வருகிறார்.
இறுதியில், இந்தத் திருமணம் நாயுடுவின் எதிரிப் பிரச்சினையைத் தீர்த்ததா? பாரதியின் வாழ்க்கையில் அதற்குப் பிறகு என்ன நடந்தது? நாயுடு சந்திக்கும் புதிய சிக்கல் என்ன? இசாகப்பட்டணம் இறுதியில் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது? என்பதுதான் தொடரின் மீதிக்கதை.
நடிப்பு எப்படி?
நாயுடு கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, பல படங்களில் பார்த்த அதே வலிமையான, ஆளுமை மிக்க நடிப்பை இத்தொடரிலும் வெளிப்படுத்தியுள்ளார். புதிதாகச் சொல்ல ஏதுமில்லையென்றாலும், தனது அனுபவத்தால் கதாபாத்திரத்தை நம்பகமாக சுமந்திருக்கிறார்.
பாரதியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை அதிகம் பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். தந்தைக்கு எதிராக நிற்கும் மகளாகவும், தனிப்பட்ட உணர்ச்சிகளுடன் போராடும் பெண்ணாகவும் இருவேறு மனநிலைகளை அவர் வெளிப்படுத்திய விதம் கவனிக்க வைக்கிறது.
பெத்தன்னாவாக நடித்த நரேஷ் அகஸ்தியாவும் தனது நடிப்பால் ஈர்க்கிறார். குறிப்பாக தம்பி இறந்தபிறகு வரும் காட்சிகளில் அவரது நடிப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், சுனில், சுதாகர், பேனர்ஜி, ஜ்வாலா கோட்டி உள்ளிட்ட மற்ற கலைஞர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர்.
தொழில்நுட்ப அம்சங்கள்
தொடரின் பின்னணி இசை ஓகே ரகமாகவே உள்ளது. காட்சிகளுக்கு தேவையான அளவுக்கு உதவுகிறது. ஒளிப்பதிவாளர், குறிப்பாக இரவுக் காட்சிகளை நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார்.
“ஒரு மனுஷனை கொல்லணும்னு அவசியமில்லை… சாகணுங்கிற எண்ணத்தை விதைத்தா போதும்” என்ற வசனம் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இயக்கம் மற்றும் திரைக்கதை
இத்தொடரை இயக்கியுள்ள Garry B H, கதை சீரான வேகத்தில் நகரும் வகையில் இயக்கியிருந்தாலும், திரைக்கதையில் தேவையான விறுவிறுப்பு இல்லாதது ஒரு பெரிய குறையாக மாறுகிறது. சில முக்கிய திருப்பங்கள் இருந்தாலும் அவை எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
குறிப்பாக கிளைமாக்ஸ் திருப்பம் பெரிய தாக்கத்தை உருவாக்கத் தவறிவிடுகிறது. மேலும், பல படங்களிலும் தொடர்களிலும் பார்த்த கதைக்களம் போன்ற உணர்வு ஏற்படுவதால், Isakapatnam முழுமையாக ஈர்க்கும் அனுபவமாக மாறவில்லை.
மொத்தத்தில் Isakapatnam எப்படி?
இசாகப்பட்டணம் வெப் சீரீஸ், அதிகாரம், குடும்ப அரசியல், பழிவாங்கல், காதல் போன்ற அம்சங்களை ஒன்றாகக் கலந்து சொல்ல முயற்சிக்கிறது. ஆனால், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்தத் தொடர் இன்னும் வலுவான அனுபவமாக மாறியிருக்கும்.
இருப்பினும், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், நரேஷ் அகஸ்தியா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பிற்காக இந்தத் தொடரை ஒரு முறை பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் Amazon Prime Video-வில் இந்தத் தொடரைக் காணலாம்.
ரேட்டிங்: 2.75 / 5
ப்ளஸ்: நடிகர்களின் நடிப்பு, சில வசனங்கள், இரவுக் காட்சிகளின் ஒளிப்பதிவு
மைனஸ்: விறுவிறுப்பு குறைந்த திரைக்கதை, தாக்கமில்லாத கிளைமாக்ஸ், பழக்கமான கதைக்களம்
