தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பல்துறை திறமையாளராக திகழ்பவர் பாக்யராஜ். தனது குருநாதர் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தான் நாயகனாக அறிமுகமானார்.
சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், “சென்னைக்கு முதலில் வந்தபோது எனக்கு நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது சுதாகர், தெலுங்கு–கன்னட நடிகர்கள் கைப்பையில் புகைப்பட ஆல்பத்துடன் காத்திருந்தார்கள்.
அவர்களை பார்த்தவுடன், இவர்களோடு போட்டியிட முடியாது என்று பயம் வந்தது. அதனால் தான் நான் நடிப்பை விட்டுவிட்டு டெக்னிக்கலாக ஏதாவது செய்யலாம் என்று முடிவு செய்தேன். உதவி இயக்குனராக சேர்ந்ததும், இயக்குனர் ஆகவேண்டும் என்பதற்கே ஆசை கொண்டேன்; மீண்டும் நடிக்க நினைக்கவில்லை,” என்றார்.
ஆனால், 16 வயதினிலே படத்தில் வைத்தியர் வேடம் செய்ய ஆள் இல்லாததால் அவரை நடிக்க வைத்தனர். அதேபோல் கிழக்கே போகும் ரயில் படத்திலும், சிகப்பு ரோஜாக்க்கள் படத்திலும் அவருக்குத் தான் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் சிகப்பு ரோஜாக்க்கள் முடிந்ததும் அவர் சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்குத் தயாரானார். அப்போது புதிய வார்ப்புகள் படக்கதையில் பிரச்சனை எழுந்ததால் பாரதிராஜா அவரை அழைத்தார். “முதலில், ‘இயக்குனர் தான் நேரடியாக அழைக்க வேண்டும்’ என்று சொன்னேன்.
பிறகு அவர் தானே போன் செய்து அழைத்தார். கதையை சொல்லி முடித்தபின், க்ளைமேக்ஸ் சரியாக இல்லை என்றார். நான் மட்டும், ‘இன்டர்வலிலிருந்தே கதை சரியில்லை’ என்று கூறினேன். வாத்தியாருக்கும் ரதிக்கும் நடுவே திருமணம் சீக்கிரம் நடந்துவிட்டால் கதை சுவாரஸ்யம் குறையும். திருமணம் க்ளைமேக்ஸில்தான் நடக்க வேண்டும். இதை நான் மாற்றுகிறேன்’ என்று கூறினேன். அவர் சம்மதித்தார். அதன்படி கதை திருத்தப்பட்டது,” என்று பாக்யராஜ் பகிர்ந்துள்ளார்.
