நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இன்று முதல் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருவதோடு, தமிழில் இம்முறை 9வது சீசனாக ஆரம்பமாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஒவ்வொருவராக விஜய் சேதுபதி அழைத்து பிரம்மாண்டமான வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
அந்த அறிமுக நிகழ்ச்சியில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருநங்கையான அப்சரா சிஜே போட்டியாளராக நுழைந்தார்.
மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அப்சரா சிஜே. அதோடு, மாடலிங் துறையில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தற்போது சினிமா உலகிலும் தன் தடத்தை பதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
முன்னதாக நமீதா மாரிமுத்து மற்றும் ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருந்தனர். இம்முறை, அவர்களின் பாதையைத் தொடர்ந்து அப்சரா சிஜே போட்டியாளராக பிக்பாஸ் சீசன் 9-இல் கலக்கவிருக்கிறார்.
