perfectdays HERO

என்னடா வாழ்வென்று தோன்றுகிறதா! இந்தப் படத்தைப் பாருங்கள், வாழ்வதே வரம் என்று தோன்றும்!

Perfect Days – 2023 – Japanese

என்னடா வாழ்வென்று தோன்றுகிறதா! இந்தப் படத்தைப் பாருங்கள், வாழ்வதே வரம் என்று தோன்றும்.

எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைத் தேடக்கூடிய மனிதன் Hirayama. வாழ்வின் மீது எந்தவொரு புகாரும் இன்றி தனக்கான வாழ்வைக் கொண்டாடி வாழ்பவர்.

நம் உலகமும் Hirayamaவின் உலகமும் முற்றிலும் வேறானது, ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் இருக்கின்றது சிலர் இதுதான் என் உலகம் என்று கண்டுகொள்கின்றனர் சிலர் கண்டுகொள்வதே இல்லை.

Hirayamaவிற்கு ஒவ்வொரு நாளும் அதிசயம். இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே அவருக்கு வரம். அதொன்று மட்டுமே அவருக்குப் போதுமானது. தன் வாழ்க்கைக்குள் வந்து செல்லும் எவரின் எந்த செயல்பாடுகள் மீதும் விமர்சனங்களே இன்றி தன்போக்கில் தன் வாழ்வை வாழ்பவர். தன் வாழ்வுக்கென்று ஒரு வரைமுறையை வகுத்து அதன் ஒழுங்கு மீறாமல் வாழப்பழகியவர்.

Hirayama தினமும் ஒரே நேரத்தில் எழுகிறார், ஒரே வேலையைப் பார்க்கிறார், ஒரே நாளினைப் போல மறுநாளையும் வாழ்கிறார். அப்பிடியிருக்கின்ற வாழ்வில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகின்றது? என்ன அதிசயம் இருக்கிறது? என்று நமக்குத் தோன்றும் ஒரு கணத்தில் நாம் நம்மையே ஒரு முறை பார்த்துக் கொள்கிறோம், தினமும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தினம் தினம் ஆடைகள் மாற்றுவதைத் தவிர. அன்றாடங்கள் ஒரே patternஐத்தான் கொண்டிருக்கின்றன.

நகரின் பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணி Hirayamaக்கு, அதனை ஒரு தியானம் போலச் செய்வார். மிக மிக நுணுக்கமான கலைவேலைப்பாடினைப் போல முழு ஈடுபாட்டுடன் கழிப்பறையைச் சுத்தம் செய்வார். சுத்தம் செய்து முடித்த அடுத்த நொடியே அது அசுத்தமாகியாக வேண்டும் அதுதான் நியதி. தாம் சுத்தம் செய்த கழிவறையைப் பயன்படுத்தப் போகும் ஆட்களை புன்னகை மாறாமல் பார்ப்பார்.

கழிவறைக்குள் அழுதுகொண்டிருந்த சிறுவனை கைப்பிடித்து அழைத்து வந்து தேற்றிக் கொண்டிருப்பார், “அம்மா வந்து உன்னை அழைத்துச் செல்வார் கவலைப்படக்கூடாது சரியா!” சற்று நேரத்தில் மகனைத் தேடிவந்த தாய் Hirayamaவின் கைகளில் தனது குழந்தை இருப்பதைப் பார்த்து ஓடிவந்து அவரின் கைகளில் இருந்து குழந்தையை விடுவித்து அவர் பற்றியிருந்த குழந்தையின் கைகளை நாப்கின் வைத்து துடைப்பாள். ஒரு கழிவறை சுத்தம் செய்பவனின் கைகள் தன் மகன் மீது பட்டுவிட்டதென்ற அசூயை. அது ஒரு அவமானப்படுத்தல்தான். அதனையும் அவர் புன்னகை மாறாமல் பார்ப்பார். சிறுவன் அம்மாவுடன் செல்லும்போது திரும்பிப் பார்த்து சிநேகமாகக் கையசைப்பான். அந்த ஒரு கையசைப்புதான் பெரியவர்களால் புரிந்துகொள்ள முடியாத Hirayamaன் உலகின் பெரும் புதையல்.

Hirayamaக்கு ஒரு தங்கை உண்டு, அவளுக்கு ஒரு மகள். அவள், அம்மாவிடம் கோபித்துக் கொண்டு Hirayamaவைச் சந்திக்க வருவாள். அவளிடம் Hirayama காட்டும் பரிவிற்கும், இங்குதான் உன் மகள் இருக்கிறாள் என்று தகவல் தெரிவித்து மகளை அழைத்துச் செல்ல வந்திருக்கும் தங்கையை விடைபெறும் போது அணைத்து அவர் காட்டும் அன்பிற்கும் ஒரே சாயல்.

“நான் அந்த வீட்டுக்கு திரும்பிப் போக மாட்டேன்” என்று ஓடிவந்து அடைக்கலம் புகுவதற்கு இன்னொரு பாதுகாப்பான அன்பின் இடம் இருந்தால் அதெத்தனை பெரும் வரம்! எத்தனையோ பெண்கள் கணவனிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் செல்வார்கள் அல்லவா! – வயதேறிய பிறகான மறைவுதான் என்றாலும் பெற்றோரின் மறைவில் ஒரு பெண் அழுவது இனி அவள் அப்படிச் செல்வதற்கு எந்தப் போக்கிடமும் இல்லை என்றும்தான்.

ஒருதுளிக் கண்ணீரில் மனிதர்கள் விடைபெறுவார்கள், நெஞ்சம் கனக்கும், மறுநாளே இதனை மறந்து தனது வழமையான அலுவல் வாழ்க்கைக்குள் சென்று விடுவார்கள்தான். ஆனால் அவ்வொரு துளிக் கண்ணீர் இன்றி இவ்வாழ்வை வாழ்ந்தென்ன லாபம், தங்கையும் தங்கை மகளும் திரும்பிச் செல்லும்போது Hirayama அழுவார். Oh man!

இறுதிக் காட்சியில் Nina Simone – Feeling Good பாடல் ஒலிக்க, சூர்யோயத்தைப் பார்த்தபடி வண்டி ஒட்டிக் கொண்டு Hirayama காட்டும் முகபாவமும் நெகிழ்ச்சியும் ஒன்றைச் சொல்லும், yes. everyday is a perfect day. live it perfectly. live it properly.

Next time is Next time

Now Is Now.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top