Sufiyum Sujatayum trailer 759 1

படம் முடிந்தபிறகும் “ரூஹே ரூஹே ” ஹம்மிங் மனதில் ஒலிக்கிறது . ரூஹே என்றால் “உயிரே” என்று பொருள்!

உயிரில் அன்பின் சரடை மட்டும் உருவி அதில் இசைமீட்டினால் என்னாகும்! இறைவன் மீது கொண்டிருக்கும் பூரண சரணடைதல் போலான காதல் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் வாய்த்தால் என்னாகும்! காதலே பிரார்த்தனையாகும் போது, பிரார்த்தனைக்குள் இருந்து காதல் உதிக்கும் போது நிகழ்வது என்ன! அந்தவொரு மாயத்தைத்தான் sufiyum sujatayum திரைப்படம் நிகழ்த்திக் காட்டியது. படம் முழுக்க விரவிக் கிடப்பது காதலும், இசையும், நடனமும் மட்டும்தான். பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சூஃபி தன்மை மகுடிக்கு கட்டுப்பட்ட சர்ப்பம் போல நம்மை ஆட்டுவித்து விடுகிறது.

ஒரு மசூதி, அதற்கு அந்தப்புறம் ஒரு கல்லறை. அங்கு நெடுங்காலம் கழித்து தனது குருவின் கல்லறைக்கு வருகிறான் நாயகன் சூஃபி. அதிகாலை வேளையில் ஊர் அசமந்தமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதைக்கு அந்த மசூதியை நிர்வகிப்பவர் பாங்கு பாடுவதற்கு தயாராகிறார். அதிகாலையில் பள்ளிவாசல்களில் அல்லாஹ்அக்பர் என்று பாடல் ஒலிக்குமல்லவா அது!

நாயகன் “நான் வேண்டுமானால் இன்று பாடட்டுமா” என்று கோரிக்கை வைக்கிறான், அவர் சம்மதிக்கிறார்.

பாடுகிறான், உயிரின் ஆழத்தில் இருந்து இறைவனை நோக்கி பாடுகின்ற அவனது பிரார்த்தனை ஊரையே உலுக்குகிறது. இன்ன மதம் என்று இல்லாமல் கேட்போர் அனைவரையும் பக்திக்குள் கரைந்து போகுமாறு பாடுகிறான். அதிகாலை தொழுகையில் கலந்துகொள்ளாத இஸ்லாமியர்கள் கூட இந்தப் பிரார்த்தனைக்கு கட்டுப்பட்டு மசூதியை நோக்கி வருவார்கள். அனைவரும் சேர்ந்து தொழுது முடிக்கையில் சூஃபி இறந்து போயிருக்கிறான். பின்னிருக்கும் கல்லறையில் அவனைப் புதைத்துவிடுவதாக சமூகம் முடிவு செய்கிறது.

இவன் இறக்கும் தருவாயில், துபாயில் இருக்கும் சுஜாதா பதறி கண்விழிக்கிறாள். ஊரில் சூஃபி சுஜாதாவின் காதல் கதையை அறிந்த ஒருவன், துபாயில் சுஜாதாவின் கணவனுக்கு செய்தி அனுப்புகிறான். கணவனுக்கு கோபம், பத்து வருடங்கள் நீ என்னோடு வாழ்ந்தும் குழந்தை பெற்றெடுத்தும் இன்னும் நீ அவன் நினைப்பில்தான் அழிகிறாய், அவன் இறந்துவிட்டான். வா நான் அழைத்துப் போகிறேன். அவன் முகத்தைப் பார்த்துவிட்டு அதற்கடுத்தாவது இந்தக் காதலில் இருந்து வெளியில் வா! கோபத்திலும் விரக்தியிலும்தான் ஊருக்கு அழைத்து வருகிறான்.

அப்படியென்ன அவர்கள் இருவருக்கும் காதல் இருந்தது என்பதைத்தான் அடுத்த ஒரு மணி நேரம் காட்சியின் கவிமொழியாகக் காண்பீர்கள். சுஜாதா கேட்கும்திறன் மட்டுமே கொண்ட வாய்பேச முடியாத பெண். இசைக்கு மயங்குபவள், கதக் நடனம் பயின்றவள், கலையில் அமிழ்பவள். சூஃபி என்பவன் பாடல் நடனம் என கலைகளில் தேர்ச்சி பெற்றவன். அவன் அவளுக்கும் மேலாக கலையில் கரைந்தே காணமால் போபவன்.

whirling dervish. கால் பெருவிரலை தரையில் ஊன்றி எழுந்து பறக்கும் தியானம் போல சுழன்று ஆடுகின்ற ஆட்டம். அப்படி அவன் ஆடுவதைப் பார்த்துப் பார்த்து ரசிப்பாள். அவனின் பாங்கு தொழுகைப் பாடலுக்கு அவன் போலவே ஆடிப்பார்த்து மகிழ்வாள். வாய்பேச முடியாத சுஜாதா அவனுக்குக் கடிதம் எழுதுவாள். அதில் “சூஃபி நான் உன்கூட பேசணும்” என்று எழுதி இருக்கும். அந்த உணர்வையும், வாய்பேச முடியாத ஒருத்தியின் முக பாவனைகளையும் அதிதி வெளிப்படுத்தி இருக்கும் விதம் ஆகப்பிரம்மாதம்!

சூஃபி தொழுது கொண்டிருக்கும்போது அவன் போல தானும் தொழுவதற்கு முயல்வாள் சுஜாதா. எனக்கு கவிஞர் மாதர்முகைதீனின் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது

தொழத்தெரியாத குழந்தை

தொழுகையாளிகளின்

வரிசையில் நிற்கிறது

தக்பீர் கட்டுகிறது

சூரா ஓதுகிறது

கேட்பதைச் சொல்லி

செய்வதைப் பார்த்து

தொழுகை முடிந்து

உருகி அழும் ஈமான்தாரியின் கண்ணீரை

அதற்கு நடிக்கத் தெரியவில்லை.

(தொகுப்பு : மாயப்பாறை)

படம் பார்த்தபிறகு இந்தக் கவிதையின் முழு பொருளை உங்களால் அறியமுடியும்.

தொழுகை முடிந்து தன்னருகே அமர்ந்திருக்கும் சுஜாதை, அவன் பறித்துத் தந்த மருதாணியைக் காண்பிக்க வந்திருக்கிறாள். உள்ளங்கைகளை நீட்டுவாள். கிளம்ப எத்தனித்தவளை தடுத்து, போகாதே என்பான். ஒரு சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றுவிடுகின்ற பிரியங்கள். “நீ என் பக்கம் இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. போகாதே!” காதல் ஓர் இறையருள் போல அவர்கள் மீது படிக்கிறது.

தனது தஸ்பீஹ்மாலையை அவளிடம் கொடுப்பான், இது என் அம்மா எனக்குக் கொடுத்தது . இதில் ஒவ்வொரு முத்தும் ஒவ்வொரு கதை சொல்லும். நீ எனக்கு மனைவியானால் இதுதான் நான் உனக்குத் தரும் சீர். ஒருவேளை நீ எனக்கு மனைவியாக முடியாமல் போய்விட்டால் இதை நீ என்னிடம் திருப்பித் தந்தாக வேண்டும். நான் இறந்தாலும் அது என்னோடே புதைக்கப்பட வேண்டும்.

இந்தக் காதல் அவனது குருவுக்கு பிடிக்கவில்லை, சுஜாதையின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. அன்பின் பயமுறுத்தல்களில் தந்தை சொல்லை மீற முடியாத நிலைக்கு ஆளாகி விடுவாள். காதல் பிரிகிறது. ஊரைவிட்டே செல்கிறான் சூஃபி. அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகிறது. கணவனோடு துபாய்க்குச் சென்றுவிடுகிறாள். இப்போது அவள் திரும்பி வருவது அவனது தஸ்பீஹ்மாலையை அவன் உடலோடு சேர்த்துப் புதைக்க.

அவள் வந்து சேர்வதற்கு முன்னாகவே சூஃபியை பெட்டியில் வைத்துப் புதைத்து விடுகிறார்கள். கணவன் மட்டும் போய் இறுதிச் சடங்கில் மாலையை கழுத்தில் அணிந்த படி வீட்டுக்குள் பித்துப் பிடித்து போய் இருக்கும் மனைவியைக் காண கணவனுக்குப் பயமாக இருக்கும். நான்கூடதான் காதலித்து இருக்கிறேன், ஆனால் இவளுக்கு இருப்பது காதல் அல்ல, வேறு ஏதோ பைத்தியம். என வசைபாடுவான். அதே நேரத்தில் அவனது பாஸ்போர்ட் தொலைந்து விடுகிறது. சூஃபியின் இறுதிச் சடங்குக்கு சென்ற இடத்தில அவனைப் புதைத்த குழிக்குள் விழுந்திருக்கும் என்று முடிவு செய்து. சமாதியைத் தோண்ட முடிவு செய்கிறார்கள். இது விபரீத முடிவு, இந்துக்கள் சென்று இஸ்லாமிய கல்லறையை தோண்டுவது பெரும் ஆபத்தில் முடியும். ஆனாலும் ரகசியாமாகச் செல்கிறார்கள். தோண்டிப் பார்த்தால் அங்கு பாஸ்போர்ட் இல்லை. கூடவே வந்து அருகில் நிற்கும் சுஜாதா தனது கையில் இருக்கும் பாஸ்போர்ட்டை அவனிடம் தருவாள். இவளுக்கு இவன் முகத்தைப் பாராமல் தீராது என்று சவப்பெட்டியைத் திறப்பான், அதற்குள் தஸ்பீஹ்மாலையை போட்டுவிட்டு அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளின் காதல் எத்தகையது என்பதே அப்போதுதான் கணவனுக்கு விளங்கும். நாம் விரும்புவர்களின் காதலையும் சேர்த்துப் புரிந்துகொள்ளும் போது காதல் மிக மேன்மையாக ஆகிறது. அதுவரைக்கும் அவள் மீது ஆற்றாமையில் இருந்தவனுக்கு வாஞ்சை பிறக்கும்

படம் முடிந்தபிறகும் “ரூஹே ரூஹே ” ஹம்மிங் மனதில் ஒலிக்கிறது . ரூஹே என்றால் “உயிரே” என்று பொருள். அல்லாஹ்அக்பர் பாங்குத் தொழுகை, நூருல்லாஹ் பாடல், எல்லாம் நம்மைச் சுற்றிச் சுற்றி வரும்.

படத்தின் பெயர் : sufiyum sujatayum

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top